அடுத்து என்ன நடக்கும்?

உங்கள் அடுத்த படிகள் உங்களுக்கேற்றவாறு திட்டமிடப்படும். உடல்நலச் சோதனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு, தடுப்பூசிகள், சிகிச்சைக்குத் தயாராவதற்கான பரிந்துரைகள் ஆகியவை இதில் இருக்கலாம்.

அடுத்த படிகள்
அடுத்த படிகள்

AKCC ஆலோசனைச் சந்திப்பு உங்கள் தொடர்ச்சியான பராமரிப்புத் திட்டத்தின் தொடக்கமாகும்.

01

பேசியவற்றை மீண்டும் பார்ப்பது

உங்களுடன் கலந்துரையாடிய பராமரிப்பு வழிகளையும் இன்னும் பதில் தேவைப்படும் கேள்விகளையும் குழு பதிவு செய்யும்.

02

சோதனைகளை ஏற்பாடு செய்தல்

தேவையான இரத்தப் பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள், ஊட்டச்சத்து மதிப்பீடு, தடுப்பூசிகள் அல்லது பிற மதிப்பீடுகள் ஏற்பாடு செய்யப்படலாம்.

03

தேவையான நிபுணர் பரிந்துரைகளை ஏற்பாடு செய்தல்

தேவைப்பட்டால் மாற்று அறுவைச் சிகிச்சை மதிப்பீடு, PD தயாரிப்பு, இதய மதிப்பீடு அல்லது டயாலிசிஸிற்கான இரத்த நாள அணுகுவழியைத் திட்டமிடப் பரிந்துரைக்கப்படலாம்.

04

தொடர்ச்சியான கண்காணிப்பு

AKCC உங்கள் சிறுநீரக நலத்தைத் தொடர்ந்து கண்காணித்து உடல்நிலை அல்லது சூழ்நிலை மாறும்போது திட்டத்தை மாற்றும்.

அடுத்த கட்ட பராமரிப்பிற்குத் தயாராகுதல்

உங்கள் சிறுநீரக பராமரிப்புக் குழு கவனிக்கும் முக்கிய அம்சங்கள்

அடுத்த கட்ட பராமரிப்பிற்குத் தயாராகும்போது, உங்கள் உடல்நிலை மற்றும் தேவைகளைப் பொறுத்து சில முக்கிய அம்சங்களை சிறுநீரக பராமரிப்புக் குழு மதிப்பிடும்.

தேவையான தடுப்பூசிகளை வழங்குதல்

உங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மீதமுள்ள தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் அறிய

உங்கள் தடுப்பூசிப் பதிவை குழு சரிபார்த்து, உங்கள் வயது, உடல்நிலை மற்றும் இதற்கு முன் பெற்ற தடுப்பூசிகளின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தீர்மானிக்கும். ஹெபடைட்டிஸ் B, இன்ஃப்ளூயன்சா, நியூமோகொக்கல் மற்றும் வரிசெல்லா (சின்னம்மை) போன்ற தடுப்பூசிகள் உங்களுக்குத் தேவையா என்பதைப் பற்றியும் குழு உங்களுடன் கலந்துரையாடும். டயாலிசிஸ் தொடங்குவதற்கு முன் ஹெபடைட்டிஸ் B தடுப்பூசியை வழங்குவதன் மூலம் சிறந்த பாதுகாப்பைப் பெற முடியும்.

உங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் எவை, அவற்றை எப்போது வழங்க வேண்டும் என்பவை உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப தீர்மானிக்கப்படும். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகும் நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் சில தடுப்பூசிகளை வழங்க வேண்டியிருக்கலாம்.

ஊட்டச்சத்து மதிப்பீடு

உங்கள் பசி, உடல் எடை, உடல் வலிமை மற்றும் உணவுப் பழக்கங்கள் மதிப்பிடப்பட்டு, தேவைக்கேற்ப உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் அறிய

உங்கள் உடல் எடை, பசியின்மை, குமட்டல், வீக்கம் மற்றும் வழக்கமான உணவுப் பழக்கங்கள் பற்றி சிறுநீரக பராமரிப்புக் குழு உங்களுடன் பேசும். உங்கள் உடல்நிலை, இரத்தப் பரிசோதனை முடிவுகள் மற்றும் சிகிச்சைத் திட்டத்தின் அடிப்படையில், தேவையான உணவு மாற்றங்கள் குறித்து சிறுநீரக உணவியல் நிபுணர் அல்லது பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை வழங்கலாம்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகள் தேவையில்லை. உங்கள் உடல்நிலை மற்றும் இரத்தப் பரிசோதனை முடிவுகளுக்கேற்ப எந்த உணவுகளை மாற்ற வேண்டும் என்பதை சிறுநீரக பராமரிப்புக் குழு உங்களுக்கு விளக்கும்.

இதய நலத்தை மதிப்பிடுதல்

உங்கள் இதய நலம் மற்றும் இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளனவா என்பதைப் பார்த்து, தேவையான பரிசோதனைகள் அல்லது மேலதிக மதிப்பீடுகள் செய்யப்படும்.

மேலும் அறிய

உங்கள் இரத்த அழுத்தம், மருத்துவ வரலாறு மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் ஏற்படும் சிரமங்கள் குறித்து மதிப்பிடப்படும். மார்புவலி அல்லது மார்பு அசௌகரியம், மூச்சுத்திணறல், நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது விரைவில் சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதும் கேட்கப்படும். தேவைக்கேற்ப ECG, echocardiogram அல்லது பிற இதயப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.

அனைவருக்கும் எல்லா இதயப் பரிசோதனைகளும் தேவையில்லை. உங்கள் அறிகுறிகள், மருத்துவ வரலாறு மற்றும் திட்டமிடப்படும் சிகிச்சையைப் பொறுத்து எந்தப் பரிசோதனைகள் தேவை என்பதை சிறுநீரக பராமரிப்புக் குழு தீர்மானிக்கும்.

தேவைப்பட்டால் AV ஃபிஸ்டுலாவிற்கான பரிந்துரை

எதிர்காலத்தில் இரத்த டயாலிசிஸ் தேவைப்படலாம் எனில், பொருத்தமான இரத்த நாளங்களை முன்கூட்டியே பரிசோதித்து, தேவையானால் AV ஃபிஸ்டுலா உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் அறிய

குழு உங்கள் கைகளிலுள்ள இரத்த நாளங்களைப் பரிசோதித்து, தேவைக்கேற்ப இரத்தநாள வரைபடப் பரிசோதனை (vessel mapping) செய்யும். இதன் மூலம் AV ஃபிஸ்டுலா அமைப்பதற்கு ஏற்ற இரத்த நாளங்களை அறுவைச் சிகிச்சை நிபுணர் தேர்ந்தெடுக்க முடியும். AV ஃபிஸ்டுலா உருவாக்கப்பட்ட பிறகு, டயாலிசிஸுக்குப் பயன்படுத்த ஏற்ற நிலையை அடைய பொதுவாக சில வாரங்கள் தேவைப்படும்.

அனைவருக்கும் AV ஃபிஸ்டுலா தேவையில்லை. நீங்கள் இரத்த டயாலிசிஸ் செய்யத் திட்டமிடுகிறீர்களா, எப்போது டயாலிசிஸ் தேவைப்படலாம், உங்கள் இரத்த நாளங்களின் நிலை மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு AV ஃபிஸ்டுலா உங்களுக்கு ஏற்றதா என்பதை குழு தீர்மானிக்கும்.

AV ஃபிஸ்டுலா என்றால் என்ன?
உங்கள் பராமரிப்புத் திட்டத்திற்கேற்ப

உங்கள் பராமரிப்புத் திட்டத்திற்கு ஏற்ப அடுத்த படி

உங்களுக்கு பொருத்தமான அடுத்த கட்ட பராமரிப்பை உங்கள் சிறுநீரக பராமரிப்புக் குழு உங்களுடன் கலந்துரையாடி திட்டமிடும்.

மாற்று அறுவைச் சிகிச்சை

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உங்களுக்கு பொருத்தமானதா என்பதை மதிப்பிடுவதுடன், உயிருடன் உள்ள அல்லது இறந்த தானமளிப்பவரிடமிருந்து சிறுநீரகம் பெறும் வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடப்படும்.

வயிற்றுப்படல டயாலிசிஸ்

PD கத்தீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வீட்டில் CAPD அல்லது APD செய்வதற்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும்.

இரத்த டயாலிசிஸ்

AV ஃபிஸ்டுலா அல்லது கத்தீட்டர் எது உங்களுக்கு பொருத்தமானது என்பதைத் தீர்மானித்து, டயாலிசிஸ் நிலையத்தில் சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

டயாலிசிஸ் இல்லாத சிறுநீரக பராமரிப்பு

அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி, தேவையான மருத்துவ பராமரிப்பைத் தொடர்ந்து வழங்கி, அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை நன்றாகப் பேணுவதில் கவனம் செலுத்தப்படும்.

உங்கள் ஆலோசனைச் சந்திப்புக்குப் பிறகு

கேள்விகள் இருந்தால் உங்கள் சிறுநீரக பராமரிப்புக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் ஆலோசனைச் சந்திப்புக்குப் பிறகு, தேவையான தொடர்பு விபரங்கள் உங்களுக்கு வழங்கப்படும். சிகிச்சை குறித்து கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், முடிவெடுப்பதற்கு முன் உங்கள் சிறுநீரக பராமரிப்புக் குழுவுடன் மீண்டும் கலந்துரையாடலாம்.

வார நாட்களில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

உங்களுக்கு விருப்பமான மொழியில் குழுவுடன் பேசலாம்.

உங்கள் தேவைகள் மாறும்போது பராமரிப்புத் திட்டத்தையும் மாற்றலாம்.

AKCC ஆலோசனைச் சந்திப்புக்குப் பின்னரும் பின்தொடர் பராமரிப்பு தொடரும். உங்கள் சிறுநீரக செயல்பாடு, உடல்நிலை, குடும்பச் சூழ்நிலை அல்லது விருப்பங்கள் மாறினால், உங்கள் பராமரிப்புத் திட்டத்தை சிறுநீரக பராமரிப்புக் குழுவுடன் மீண்டும் பரிசீலித்து மாற்றலாம்.